13 ஆவது திருத்த சட்டத்தினைகூட நிறைவேற்ற முடியாத அளவில் இந்தியா இருக்கின்றதா..!
இலங்கையில் 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவருவதற்கு வெறுமென இந்தியா மட்டும் காரணமல்ல அன்றைய காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள், ஆயுதக்குழுக்கள் பலமாக இருந்தமையே காரணம் என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை ஆயுத குழுக்களும் இந்தியாவும்
இலங்கை அரசு ஆயுதக்குழுக்களை தனித்து சமாளிக்கமுடியாத சூழ்நிலையும்தான் 13 ஆவது திருத்தச்சட்டம் வருவதற்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் வருவதற்கும் காரணமாக இருந்தது.
1987 ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு இயக்கங்கள் பலமான ஆயுத சக்தியாக இருந்தது அப்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் இந்தியாவிடம் சென்று தான் பேச்சுக்கு தயார் என்று கூறியதற்கு முக்கியமான காரணம் இங்கு போராடிக்கொண்டிருந்த ஆயுதக்குழுக்களை சமாளிக்கமுடியாது என்ற சூழ்நிலையினை மறக்கமுடியாது.
அந்த காலத்தில் இந்தியா தமிழ்மக்களுக்கு சார்பான ஒரு சூழ்நிலையினை உருவாக்கி ஒரு சுயாட்சியினை ஏற்படுத்தி தருவோம் என்ற வாக்குறுதிகளை இயக்கங்களுக்கு கூறியது மாத்திரம் அல்லாமல் சில அழுத்தங்களையும் கொடுத்துதான் 13 ஆவது திருத்தச்சட்டம் வருவதற்கான இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்த்தின் பின்னர் தமிழ்மக்களுக்கான தீர்வினை தருவோம் என்றும், அந்த நேரம் வந்த இலங்கை இந்திய அமைதிப்படையினர் வந்து ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்றும் கேட்டபோது இந்த தீர்வில் நம்பிக்கை இல்லாத நிலையிலும் கூட வேண்டுகோளினை ஏற்று ஆயுதங்களை கையளித்தது.
இந்தியா அந்த நேரம் பலமாக இருந்த ஆயுதக்குழுக்களை பலவீனப்படுத்தியதன் பின்னர் அந்த விடயத்தினை செயற்படுத்தாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியது.
எங்களால் தீர்பினை தரமுடியவில்லை உங்களிடம் பெற்றவற்றை திருப்பி தருகின்றோம் என்பது ஒரு வகையில் நியாயம்.
அதையும் செய்யாமல் பிரச்சினையினை தீர்க்காமல் பலவீனமாக 13 ஆவது திருத்த சட்டத்தினைகூட நிறைவேற்ற முடியாத அளவில் இந்தியா இருக்கின்றதா என்பது மிகவும் பெரிய கேள்விக்குறி.
அப்படி என்றால் இலங்கை பிரச்சினையில் இந்தியா சம்மந்தப்பட்டது தமிழர்களுக்காகவோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்காகவோ அல்ல இலங்கையில் இருக்கின்ற பேரினவாத சக்திகளை காப்பாற்றுவதற்காகத்தான்.
நாங்கள் இலங்கைக்கு வந்தோம் என்பதை வெளிப்படையாக சொல்லவேண்டும்.
அல்லது இந்த பிரச்சினையில் தலையிட்டு அதனை தீர்த்துவைக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவிடம் இருக்கின்றது.” என்றார்.