வெளிநாட்டு வேலை தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை தொடர்பில் 1,371 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு (Sri Lanka Bureau of Foreign Employment) தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்த்தல், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடிகள் செய்தல், சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களை வழிநடத்துதல் போன்ற குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் 495 முறைப்பாடுகள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் முறைப்பாட்டாளர்களுக்கு சொந்தமான சுமார் 53,509,520 ரூபா பணத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நீதிமன்றில் முன்னிலை
இந்த நிலையில், 680 முறைப்பாடுகள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 28 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அனுமதியின்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்டதாக கூறப்படும் 8 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |