13ம் திருத்தச்சட்டம் தொடர்பில் நாளை சர்வகட்சி மாநாடு!
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான சர்வகட்சி மாநாடு நாளை (26) அதிபர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மாலை 5.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை தொடர்ந்து, சர்வகட்சி மாநாடு நடத்தப்படுமென அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
13 ஆவது அரசியலமைப்பு

இதில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சுயாதீன குழுக்களின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்த சர்வகட்சி மாநாடு அமையும் என இந்தியப் பிரதமருக்கு ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி இது தொடர்பான தீர்மானத்தை இதுவரை அறிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.