தமிழர்கள் விடயத்தில் புதிய நகர்வு!! இந்தியாவுடனும் பேரம்பேசல்கள்?
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் பேரம்பேசல்கள் இடம்பெறலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்தார்.
நேற்று வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ஒற்றையாட்சியை நிராகரிப்பது தான் எம்மிடம் இருக்கும் ஒரே வழி எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,
“அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வர எத்தனித்துள்ளார்.
அவர் இந்தப் புதிய அரசியலமைப்பை இந்தியாவிற்கு சீனாவைக் காட்டி, சீனாவை நாங்கள் தவிர்க்க விரும்பினால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஒற்றையாட்சிக்குள் முடக்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அதனை நீங்கள் செய்தால் நாம் சீனாவின் விடயத்தில் பரிசீலிக்கலாம் என்ற ஒரு கருத்தைச் சொல்ல இருக்கும் பின்னணியில், இந்தியாவின் கடுமையான அச்சுறுத்தலும், கட்டளையாலும் தான் அவர்களுடைய முகவர் அமைப்புக்கள் இன்று ஒன்று சேர்ந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் இந்திய விரும்பி கேட்டதை தங்களுடைய கோரிக்கையாக முன்வைத்துள்ளார்கள்.
எங்களைப் பொறுத்தவரை ஒற்றையாட்சிக்குள் எந்தவொரு இடத்திலும் தமிழருக்கு தீர்வு வரப்போவதில்லை. மாறாக ஒற்றையாட்சி அரசியலமைப்பை போன ஆட்சிக் காலத்தில் “ஏக்கய ராச்சிய” என ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஒற்றையாட்சி என்ற சிங்கள வசனத்தை ஒருமித்த நாடு எனத் தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டி ஏக்கிய ராச்சிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வைக்கும் சதி ஒன்றைச் செய்தது அதனை நாம் முறியடித்தோம்.
13 ஆவது திருத்தச் சட்டம் அல்லது இன்னொரு வடிவமாக இருக்கலாம். ஆனால், ஒற்றையாட்சியை நிராகரிப்பது தான் எம்மிடம் இருக்கும் ஒரே வழி.
இலங்கையில் நிறைவேற்றி இருக்கின்ற மூன்று அரசியலமைப்புக்களையும் நாம் நிராகரித்து இருப்பதனால் தான் போர் முடிந்து 13 வருடங்களுக்கு பிறகும் இந்தத் தீவில் ஒரு இனப்பிரச்சனை இருக்கின்றது என பேசக் கூடியதாக இருக்கின்றது.
அந்தப் பேச்சுக்கே இடமில்லாமல் செய்யும் அளவுக்கு இந்த இந்திய அடிப்படை அமைப்புக்கள் தமது எஜமான் விரும்பியதற்கு செயற்பட தயாராக இருக்கிறார்க்கிறார்கள்.
நான்காவது அரசியலமைப்பை, மக்களது சர்வசன வாக்கெடுப்புக்கு விடாது வெறுமனே நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறக் கூடிய ஆபத்தும் இருக்கிறது” என்றார்.
