இனப்பிரச்சினைக்கான தீர்வில் சம்பந்தன் இரட்டை நிலைப்பாடாம்
இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இரா.சம்பந்தன் இரட்டை நிலைப்பாட்டுடன் உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வான சமஷ்டி நோக்கிய நகர்வின் முதல் படியாக 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தாம் கோரியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இரட்டை நிலைப்பாடு
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும் தமது தீர்மானத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் தர்மலிங்கம் சித்தார்த்தன் நிராகரித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கோரும் கடிதத்தில் தாம் கையெழுத்திடப் போவதில்லை என இரா.சம்பந்தன் தற்போது கூறியதாகவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதற்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி அனுப்பட்ட கடித்தில் இரா.சம்பந்தனும் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழீழத்திற்கும் 1956 ஆம் ஆண்டு முதல் சமஷ்டிக்குமே தமிழ் மக்களின் ஆணை வழங்கியுள்ளனர் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தாம் சமஷ்டி தீர்வை கைவிடவில்லை எனவும் அதனை இறுதித் தீர்வாக அடையும் முயற்சியில் அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆரம்ப படிநிலையாக முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் தாம் இந்தியாவை கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமஷ்டி தீர்வை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கும் போது, ஜதார்தத்தில் காணி உள்ளிட்ட அனைத்தும் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோய்க்கொண்டிருப்பதாகவும் புளொட்டின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
சமஷ்டி தீர்வு
அனைவரும் எதிர்பார்க்கும் சமஷ்டி தீர்வு கிடைக்கும் போது தமிழ் மக்களிடம் எதுவும் இருக்காது எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் பல்வேறு அதிகாரங்கள் மகாணங்களுக்கு உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆகவே இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தற்போது இருப்பதையேனும் பாதுகாக்க முயல வேண்டும் எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தீர்வாக கோருமாறு, எந்தவொரு இந்திய அதிகாரிகளும் தம்மை தொடர்புகொள்ளவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.