போர்வெற்றிநாள் நிகழ்வில் அரசியல் உரையை தவிர்த்த ரணில்
இலங்கைத் தீவின் இன முரண்பாட்டுக்குள் சிக்கியுள்ள இரண்டு தேசிய இனங்களில், ஒரு இனமான ஈழத் தமிழினம் தான் எதிர்கொண்ட வரலாற்றுப் படுகொலையை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நேற்றைய தினம் நினைவுறுத்தியிருந்தது.
ஆனால் அதற்கு மறுநாளான இன்று, தெற்கு தனது பெருந்தேசியவாத மமதையை வெளிப்படுத்தும் வகையில் மே 19 போர் வீரர்கள் நினைவேந்தலை மாலை வேளை சிறிலங்காவின் கோட்டை சிறிஜெயவர்தரனபுர பகுதியில் உள்ள தேசிய யுத்த வீரர் நினைவு தூபியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடத்தியிருந்தது.
போர் வெற்றி உரை
கொழும்பு அதிகார மையத்துடன் இணைபிரியாதிருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகம் மற்றும் படைத்துறையின் ரணிவிருசேவா அதிகார சபை ஆகியன ஒருங்கிணைந்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தன.
ஆனால் இன்றைய நிகழ்வில், முன்னர் ராஜபக்ச அதிகாரம் மையம் செய்தது போல ரணில் அரசியல் உரை எதனையும் ஆற்றிக் கொள்ளவில்லை.
அவ்வாறாக ரணில் முதன் முதலாக அதிபர் என்ற வகையில் போர் வெற்றி நாளில் ஒரு உரையை வழங்க வேண்டும் என்ற அழைப்பை சிறிலங்கா படைத்துறை விடுத்திருந்த போதிலும், இவ்வாறான நகர்வின் மூலம் ரணங்களை கிளரும் அரசியலை தான் செய்யப் போவதில்லை. மாறாக நல்லிணக்கப் பாவையே தனக்கு முக்கியம் என்ற ஒரு அடையாளத்தை ரணில் நீட்டத் தலைப்பட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு தங்கியிருந்து கள ஆய்வை மேற்கொண்டு வருகின்றது.
ரணிலின் தந்திரோபாயம்
அந்த நிலையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை எனப்படும் முக்கியமான இலக்கை மையப்படுத்தியும் ரணில் இந்த தந்திரோபாயத்தை நகர்த்துவதாக கூறப்படுகின்றது.
இன்று ரணில் இவ்வாறு ஒரு உரையை ஆற்றி இருந்தால். அதனை உன்னிப்பாக கவனிக்கவும் மேற்குலக தரப்புகள் இருந்த நிலையில் ரணிலின் இந்த தந்திரோபாயம் வெளிப்பட்டது.
ஆனால் ரணில் விக்ரமசிங்க படையினரின் போர்வெட்டியை பாராட்டும் வகையில் ஒரு உரையை ஆற்றி மேற்குலகின் தடைகள் குறித்த அச்சத்தில் உள்ள தனது படை முகங்களை திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை சிறிலங்கா படைத்தரப்பு இறுதிவரை விடுத்தாலும், இந்த நிகழ்வில் அரசியல் உரையை செய்வதில்லை என்ற நிலைப்பாட்டை ரணில் மாற்றவில்லை எனக் கூறப்படுகிறது.





