மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி இடைநீக்கம்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த, 15 மின்சாரசபை ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பணிப்புரைக்கு அமைய மின்சாரசபையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மின் கட்டணங்களை செலுத்துவதற்காக வருகை தந்திருந்த மின் பாவனையாளர்களுக்கு இடையூறு விளைவித்திருந்த, 15 ஊழியர்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கைகள்
மின்சார சபையினை அரசாங்கம், தனியார் மயமாக்கப் போவதாக கூறி அண்மையில் பல தொழிற்சங்கங்கள், எதிர்ப்பு பிரசாரம் உள்ளிட்ட பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.
இந்நிலையில் மின்சார சபை நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறும் வகையிலும், சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டனர்.
கஞ்சன விஜேசேகர பணிப்பு
இந்நிலையில் இடையூறு விளைவித்த ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து, உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.
இதனை தொடர்ந்தே 15 ஊழியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |