மன்னாரில் கடல் அட்டைகள் பிடித்த 16 பேர் கைது!
மன்னார் இரணைதீவு தெற்கு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடிப்பதில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26) செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொறுப்பான கடற்றொழில் நடைமுறைகளை பொருட்படுத்தாத மக்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக தீவின் கரையோர மற்றும் கடல் பகுதிகளில் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
16 பேர் கைது
இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக வடமத்திய கடற்படை குழுவினர், இரணைதீவு தெற்கிலிருந்து செட்ரிக் படகுகளை நிலைநிறுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான ஐந்து படகுகளை இடைமறித்து சரியான உரிமம் இல்லாமல் இரவு கடலட்டைகள் பிடிப்பதில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து ஐந்து படகுகள், டைவிங் கியர் மற்றும் 3178 கடல் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கடலட்டைகள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முழங்காவில், வீரவில் மற்றும் நாச்சிக்குடா பிரதேசங்களைச் சேர்ந்த 25 வயது முதல் 52 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் கடலட்டைகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |