இந்தியாவில் துர்கா பூஜை கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி!
இந்தியாவின் - கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தல் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததுடன் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்கத்தாவின் சாரா பார்க் துர்கா பூஜை பந்தலின் வெளியேறும் வாயிலில் நேற்று (17) மாலை இடம்பெற்ற இத்துயரச் சம்பவத்தில் 13 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
துர்கா பூஜையின் சப்தமி தினத்தன்று பெய்த பலத்த மழையின் காரணமாக, பந்தலைப் பார்வையிட வந்த பெருமளவான மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டபோதே இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சரின் அறிவிப்பு
சம்பவத்தையடுத்து காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குறித்த பூஜை ஏற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட 12 பேர் விசாரணைகளுக்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணங்களை அறிவித்துள்ளது.அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிதியுதவியும், Group D அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்பதுடன், அவர்களுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |