காவல்துறையினர் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
காவல்துறையினர் எனத் தம்மை அடையாளப்படுத்தி, வீதிகளில் பயணிப்போரை இடைமறித்து அச்சுறுத்தி பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (21) சீதுவை, பண்டாரவத்தை பகுதியில் நீர்கொழும்பு பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 27 வயதுடைய பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பின்னர் அவர்கள் சீதுவை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சீதுவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட லியனகேமுல்ல, அமந்தொலுவ, தம்பதுரய மற்றும் உடம்மிட்ட ஆகிய பகுதிகளில்,காவல்துறையினர் போல் நடித்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்ட ஆறு சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் தேடப்பட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீதிகளில் பயணிப்போரை இடைமறித்து காவல் சோதனை நடத்துவது போல் பாசாங்கு செய்து, அவர்களை அச்சுறுத்திய பின்னர் பணம் மற்றும் உடைமைகளைக் கொள்ளையிட்டுள்ளதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், கட்டுநாயக்க காவல் பிரிவுக்குட்பட்ட எதரிசூரிய பகுதியில் இடம்பெற்ற பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் இவர்கள் தேடப்பட்டு வந்ததாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (22) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பில் சீதுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |