2024 இல் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு : டயானா கமகே எதிர்பார்ப்பு
இலங்கையின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த வருடம் சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
இதேவேளை 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 106% அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே சுற்றுலாத்துறை டயனா கமகே இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்திரமான நிலைக்கு வந்துள்ள சுற்றுலாத்துறை
இது தொடர்பில் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..
“கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ளது. சுமார் மூன்று வருடங்களாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த சுற்றுலாத்துறை இன்று ஓரளவு ஸ்திரமான நிலைக்கு வந்துள்ளது. 2023 டிசம்பர் இறுதியில் 106 % சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.
இவ்வருடம் மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இன்னும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கவும் அவசியமான பணிகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.
2023 ஆம் ஆண்டில் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைப்பதே எமது இலக்காக இருந்தது. நாம் அந்த இலக்கை ஓரளவுக்கு அடைந்துகொண்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட வேண்டும்.
06 பில்லியன் டொலர் வருமானம்
இவ்வருடம் எமது இலக்கு குறைந்தது இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு அழைத்து வருவதாகும். அதன் ஊடாக 06 பில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக, சுற்றுலாத் தளங்களின் பிரவேசப் பத்திரங்களுக்கான கட்டணங்கள் அதிகரித்திருக்கின்றமை தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.
வற் வரி எவ்வளவு தூரம் எமது சுற்றுலாத் துறையில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது குறித்தும் சுற்றுலாத் துறைக்கு இந்த வற் வரி தொடர்பில் நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் சுற்றுலாத் துறை அமைச்சர், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடுகின்றார்.
சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்தல்
அந்தப் பணிகள் வெற்றியடையும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை தற்போது ஆரம்பித்துள்ளதுடன் அவற்றை இவ்வருட இறுதியில் நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம்.
உதாரணமாக எல்ல, பண்டாரவளை, நீர்வீழ்ச்சிகள் மற்றும் இராவணன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை போன்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று தென்பகுதி உட்பட நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்நாட்டுக்கு டொலர் கொண்டு வரும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அதிபர் உட்பட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.எதிர்காலத்திலும் அவ்வாறே அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எமது பணிகள் வெற்றியடையும் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம்” என டயானா கமகே மேலும் தெரிவித்தார்.

செங்கடலில் அதிகரித்துள்ள பதற்றம் : யெமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தாக்குதல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
