வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்
2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான வேலைத்திட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது பணியகத்தின் தவிசாளர் கோசல விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நிகழ்வில் உரையாற்றிய பணியகத்தின் பொது மேலாளர் டி.டி.பி. சேனநாயக்க, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
வெளிநாட்டு வேலை
இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், அந்த ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்புதலில் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற தொழிலாளர்களில் 65% பேர் தொழில்முறை வேலைகளுக்கும், 35% பேர் குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்கும் சென்றதாகவும் பொது மேலாளர் சுட்டிக்காட்டினார்.
நாடுகள்
இவ்வாறானதொரு பின்னணியில், இவ்வருடம் (2025) 75 சதவீத தொழிலாளர்களை தொழில்முறை வேலைகளுக்கும், 25 சதவீத தொழிலாளர்களை குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்கும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குவைத்துக்கு 84,000 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 55,000 பேரும், சவுதி அரேபியாவுக்கு 52,000 பேரும் அனுப்ப எதிர்பார்க்கபடுவதாகவும் டி.டி.பி. சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால், 15,900 இஸ்ரேலிய வேலைகள், ஜப்பானில் 9,000 வேலைகள் மற்றும் 8,000 தொழிலாளர்களை தென் கொரியாவிற்கு அனுப்பவும் நேரடியாக பரிந்துரைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)