யாழில் கோவில் நகையை திருடிய பூசகரிடமிருந்து மேலும் 22 பவுண் நகைகள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் காவல்துறையினரால் ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் கோவில் உதவி பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவிட்டார்.
கோவில் நகை
இதன்படி பூசகரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டது.
கோவிலுக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன.
இது தொடர்பாக ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆலயப் பெட்டகம் உடைக்கப்படாத நிலையில், போலிச் சாவிகளை பயன்படுத்தி நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
கவனயீர்ப்புப் போராட்டம்
இந்தநிலையில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அந்தப் பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்த விசாரணை இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது என்ற மக்களின் குற்றச்சாட்டு, யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபராக காளிங்க ஜெயசிங்கவின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அவர், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் யாழ் மாவட்டக் குற்றத் தடுப்பு காவல்துறை பிரிவுக்கு மாற்றினார்.
அதன்பின்னர் யாழ் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலக வழிகாட்டலில் உப காவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான காவல்துறையினர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
பூசகர் கைது
விசாரணைகளின் அடிப்படையில் 28 வயதுடைய பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் ஆலயத் திருவிழாவின்போது உதவி பூசகராகச் செயற்பட்டிருந்தார். சந்தேகநபரிடம் இருந்து 40 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில் விசாரணைகளின் போது திருடப்பட்ட நகைகள் அனைத்தும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |