மக்களின் கருத்தை கவனத்தில் எடுக்காத 225 மக்கள் பிரதிநிதிகள்- புபுது ஜயகொட ஆவேசம்
மக்களின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை
நாடாளுமன்றத்தின் வாக்கு வீதத்திற்கும் வெளியில் உள்ள மக்களின் கருத்துக்கும் இடையில் பல ஒளி வருட இடைவெளி இருப்பதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட இன்று (20) பிற்பகல் தெரிவித்தார்.
இதனாலேயே 69 இலட்சம் வாக்குகளையும் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தையும் கொண்டிருந்த அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய நாடு பயன்படுத்தப்பட்டது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது அதிபர் தேர்தலில் தெளிவாக நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்த புபுது ஜயகொட, நாடாளுமன்றத்திற்கு வெளியே 200 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் கேள்விகள் மற்றும் குறைகள் உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கருத்து,மக்களின் அரசியல் அபிலாஷைகளை சிறுமைப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் மீது நம்பிக்கை இழப்பு
நீண்ட காலமாக நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அதிபர் மாளிகைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், 'அதிகாரம் மக்கள் கையில்' என்ற கோசங்களை எழுப்பியதாகவும் ஜயகொட தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அதிபர் நியமன வாக்கெடுப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட இதனை தெரிவித்தார்.
