ஒரே நாளில் 23 ஏவுகணைகள்..! அச்சத்தில் தென்கொரியா - தீபகற்பத்தில் பதற்றம்
ஏவுகணை
வடகொரியா இன்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.
குறிப்பாக, தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி கொரிய தீபகற்பத்தில் வடகொரியா போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு
தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.
அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்றும் வடகொரியா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில், வடகொரியா இன்று ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
காலை 17 ஏவுகணைகள் நண்பகல் 6 ஏவுகணைகள் என மொத்தம் 23 ஏவுகணைகளை ஏவி வடகொரியா மிரட்டியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
மேலும், 100-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை பதற்றம் நிறைந்த கிழக்கு கடற்பகுதியில் வீசி வடகொரியா சோதனை நடத்தியுள்ளதாக தெரிகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதேபகுதியில் தென்கொரியாவும் ஏவுகணைகளை ஏவி பதிலடி கொடுத்துள்ளது.
இரு நாடுகளும் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.