கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்களில் 2500 பேர் பலி
மத்தியதரைக் கடலின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் இவ்வாண்டில் இதுவரையில் 2,500 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் சுமார் 186,000 பேர் ஐரோப்பிய நாடுகளை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் பணிப்பாளர் ருவேன் மெனிக்திவேலா ஐ.நா பாதுகாப்புச் சபையில் இது தொடர்பில் அண்மையில் உரையாற்றிய போது
2,500இற்கும் மேற்பட்டவர்கள்
''186,000 மக்கள் மத்தியதரைக் கடலை கடந்திருப்பதோடு இதில் 83 வீதமான அதாவது சுமார் 130,000 பேர் இத்தாலியை அடைந்துள்ளனர்.
இவ்வாண்டின் செப்டெம்பர் 24ஆம் திகதிக்குள் மாத்திரம் 2,500இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து அல்லது காணமல் போயுள்ளனர். இந்த உயிரிழப்புகளில் முடிவை காணவில்லை.
ஐரோப்பாவுக்கான தரைவழிப் பாதையும் இதைப்போன்றே ஆபத்து மிக்கது." என தெரிவித்தார்.
இவ்வாண்டில் அதிகரிப்பு
இதேவேளை மத்தியதரைக் கடலைக் கடந்து மக்கள் சென்றடைந்த ஏனைய நாடுகளில் கிரேக்கம், ஸ்பெயின், சைப்ரஸ் மற்றும் மோல்டா நாடுகளும் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த கடல் பயணத்தை கடக்கும் முயற்சியில் உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் அதிகரித்திருப்பதாக பாதுகாப்புச் சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டில் இக்காலப்பகுதியில் பதிவாகிய 1,680 உயிரிழப்பு அல்லது காணாமல்போனவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகப்பெரிய அதிகரிப்பாகும்.