அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம்
அரச பணிகளுக்கான செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், 2019இல் ஏற்பட்டதுபோல், அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அரச பணிகளுக்கான செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்கும் வகையில் அவ்வப்போது, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
செலவுகளுக்கு ஒப்புதல் மசோதா
இவ்வாறு தற்போதைய நிலையில், நேற்றைய தினம் வரைக்கான நிதிக்கு மட்டும் ஒப்புதல் உள்ளது.
வரும், நவம்பர் மாதம் வரைக்கான செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், ரஷ்யா போர் தொடுத்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பதற்கு, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனால் செனட் சபையில், இந்த மசோதா நிறைவேறினாலும், பிரதிநிதிகள் சபையில் நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டது.
பிரதிநிதிகள் சபை சபாநாயகரான கெவின் மெக்கார்த்தி, நிதி ஒதுக்க ஆதரவு தெரிவித்தாலும், அவரது குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இழுபறியை முறியடிக்க முயற்சி
மேலும், மெக்கார்த்தியை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் ஜோ பைடனின் ஆளும் ஜனநாயகக் கட்சி, இந்த இழுபறியை முறியடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், சிக்கல் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், 2019க்குப் பின், மீண்டும் அமெரிக்கா முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.