படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவு நாள்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) போர்க்காலத்தில் துணிகரமாக செயற்பட்ட முன்னணி ஊடகவியலாளர்களில் ஒருவரான மயில்வாகனம் நிமலராஜன் (Mylvaganam Nimalrajan) படுகொலையின் 25ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த வேளை சிறிலங்கா இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த அவரது வீட்டுக்குள் வைத்து ஆயுதாரிகளால் நிமலராஜன் சுட்டுக்கொல்லபட்டார்.
இந்த தாக்குதல் நடத்தபட முன்னர் நிமலராஜனின் தந்தையும் கத்திக்குத்துக்கு இலக்காகியிருந்தார்.
படுகொலைக்கு நீதி கிட்டவில்லை
அன்றைய நாட்களில் ஐபிசி உட்பட்ட ஊடகங்களுக்கு போர்கால நிலவரங்களையும், ஆக்கிரமிப்புக்கு உள்ளான யாழ்குடாவில் ஆயுதக்குழுக்கள் செய்த அடாவடிகள் குறித்தும் மிக துணிகரமான செய்திகளை வழங்கிய நிமலராஜன் தான் இறுதியாக எழுதிக் கொண்டிருந்த செய்தி ஆக்கத்தின் தாள்களின் மேலேயே தனது உயிரைத்துறந்திருந்தார்.
அவரை படுகொலைசெய்த ஆயுதாரிகள் அதன் பின்னர் அவரது வீட்டினுள் கைக்குண்டு ஒன்றை வீசியதால் அதுவெடித்தில் நிமலராஜனின் பெற்றோரும் அன்று காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் ஈபிடியினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த கொலையை செய்த ஆயுதாரி என்ற சந்தேகத்தில் ஒருவர் குறிப்பிடப்பட்டாலும் இன்று வரை நிமலராஜனின் படுகொலைக்கு நீதி கிட்டவில்லை.
இந்தநிலையில் கனடாவில் நேற்று (18) நிமராஜனின் நினைவுடன் இலங்கையில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகர்களுக்குமான நீதிகோரலுக்குரிய ஒரு ஒன்று கூடல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
