குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் !
குவைத்திலிருந்து, இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் நீண்ட காலமாக குவைத்தில் விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரிந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) காலை 06.30 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு UL-230 எனும் குவைத் விமானத்தில் வந்தடைந்துள்ளனர்.

வெளிநாட்டு வாய்ப்புப் பணியகம்
வந்தடைந்தவர்களில் அனுராதபுரம் பொலன்னறுவை பகுதிகளை சேர்ந்த பணியாளர்களே அதிகமானோர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் வீட்டுப் பணிப்பெண்கள் 24 பேரும்,வீட்டுப் பணியாளர்கள் 04 பேரும் காணப்படுகின்றனர்.
வெளிநாட்டு வாய்ப்புப் பணியகம்,இவர்களுக்கு தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக போக்குவரத்து செலவிற்கு தேவையான பணத்தை வழங்கியுள்ளது.

இலங்கை தூதரகத்தில்
இவர்கள் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் இலங்கைக்கு வருவதற்காக பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு சட்ட விரோத தொழில் புரிந்தவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகளுடன், அந்நாட்டு காவல்துறையினர் , குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதிமன்றம் ஆகியவை இணைந்து பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        