சுகாதாரதுறைக்கு பாரிய நெருக்கடி - நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இதன் காரணமாக இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இன்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சுகாதாரத்துறையின் அனுமதி இல்லாத மருத்துவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என ஏற்கனவே கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு அமைச்சகம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
விமான நிலைய அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

“மருத்துவர்கள் வெளிநாட்டில் பணியாற்றுவதற்கான அனுமதி ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே” என்று அமைச்சர் கூறினார். “வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு விடுப்பு அனுமதி உள்ளதா என்பதைச் சரிபார்க்க விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகளுக்கும் நாங்கள் தெரிவித்துள்ளோம்.
கறுப்புப் பட்டியலில் மருத்துவர்கள்

அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன், இலங்கை மருத்துவ சபையினால் வழங்கப்பட்ட உரிமம் இரத்து செய்யப்படும். அவர்களின் உரிமம் இரத்து செய்யப்பட்டால் அவர்கள் வெளிநாடுகளில் கூட பயிற்சி செய்ய முடியாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கறுப்பு பட்டியலில் உள்ள மருத்துவர்களின் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.