நத்தார் பண்டிகையை முன்னிட்டு 309 சிறைக்கைதிகள் விடுதலை
நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழர் தாயகம் உள்ளிட்ட இலங்கை முழுவதுமுள்ள சிறைகளிலிருந்து 309 சிறைக்கைதிகள் இன்று(25) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
3 பெண் கைதிகள் உட்பட 309 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இன்று விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.
சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கே மன்னிப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா
இந்த நிலையில், வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்றன காரணமாக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கே பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ். இந்திரகுமார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை விடுவித்து வழி அனுப்பி வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு
அத்துடன், மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம சிறைச்சாலை அதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
