தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை: 36வது நினைவு தினம்
மறைந்த பங்குத்தந்தை சந்திரா (Chandra Fernando) பெர்னாண்டோவின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
குறித்த நினைவு தினமானது நாளை (06) மட்டக்களப்பிலுள்ள புனித மரியாள் பேராலயத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
பங்குத்தந்தை சந்திரா பெர்னாண்டோ 1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு (Batticoloa) புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரை ஈபீஆர்எல்எவ் (The Eelam People's Revolutionary Liberation Front) ஆயுத குழு சுட்டுக்கொன்றதாக அப்போது குற்றம் சுமத்தப்பட்டது.
ஆரம்ப கல்வி
மட்டக்களப்பு புளியந்தீவில் 09.08.1948 அன்று பிறந்த பங்குத்தந்தை தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ் பாடசாலையிலும் , உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்று தனது குருக்கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்றுள்ளார்.
இந்நிலையில், மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் 1972. 09. 21 அன்று குருப்பட்டத்தை ஏற்று உதவித் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை (Trincomalee) மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவலையத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார்.
தமிழ் தேசியத்திற்கு பேரிழப்பு
அதனை தொடர்ந்து,1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வராகிய இதேகாலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்து 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார்.
மேலும், இவரின் மறைவு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பாக கருதப்படுவதுடன் விடுதலைப்புலிகளின் தலைவரால் உயிர் நீத்த அருட்தந்தைக்கு நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |