40 நாடுகள் பங்கேற்புடன் ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில்....!
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடானது நாளை (18) ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம் திகதிவரையான 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர்கள்
அவர்களில் பல நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவிருப்பதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் சீனா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இம்மாநாட்டில், இம்முறை நாட்டின் பல சிவில் சமூகங்கள் ஒன்றிணைத்து மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில், எவ்வாறு உணவுத்தட்டுப்பாட்டை முகம் கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர்.
இதில் விவசாயம் பால் பண்ணை மீன்பிடி உணவு விரயத்தை எவ்வாறு குறைப்பது பற்றி ஆலோசனைகளை முன்வைக்க உள்ளதாகவும் கடந்த 11 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மந்த போஷணை
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உலக கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர் ஹேமன் குமார தெரிவித்ததாவது,
"உலக உணவு நிறுவனம் நிலையான அபிவிருத்தி பற்றி பேசுகின்ற போதிலும் இலங்கை மக்கள் புரத தட்டுப்பாடு காரமணாக மந்தபோஷணை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், கொழும்பில் மாத்திரம் 59 வீதமான குழந்தைகள் மந்த போஷணையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிவில் சமூகத்தினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அன்றாட உணவுத்தேவைக்கான போராட்டத்தில் இருந்து இலங்கையை மீளக்கட்டி எழுப்ப நாம் பாடுபட வேண்டும்.
இவ்விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாட்டில் ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளோம்” எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |