முல்லைத்தீவு இளைஞர்கள் நால்வரை பலியெடுத்த கோர விபத்து : வெளியான பின்னணி
அனுராதபுரத்தில் நேற்று (25) இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து சென்ற நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் விபத்து குறித்த மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பிற்கு சென்ற வான் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் புதுக்குடியிருப்பு மற்றும் செம்மலை பகுதிகளைச் சேர்ந்த நான்கு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சாரதி கைது
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், ”விபத்து ஏற்பட்ட பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் மற்றும் மக்கள் வானில் பயணித்த காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை மீட்ட போது புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர் அடையாள அட்டைகள் இனங்காணப்பட்டன.
முல்லைத்தீவில் இருந்து பயணித்த குறித்த லொறி அதிகாலை 4.40 மணியளவில் குருநாகல் - அனுராதபுரம் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருக்கையில் கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த வானுடன் மோதிக்கொண்டுள்ளது
விபத்தில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த லொறியின் சாரதி தலாவ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனுராதபுரம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் தலாவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் வான் சாரதியின் தூக்கமே குறித்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் முல்லைத்தீவு - செம்மலை பகுதியை சேர்ந்த தி.விமலானந்தன் (38 வயது), புதுக்குடியிருப்பு - வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது-31), புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது-25) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேனுயன் (வயது-25) என்ற 4 இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

