உலகையே உலுக்கும் 4 வயது சிறுவனின் அழுகுரல் : இஸ்ரேல் ஹமாஸ் போரின் மறுபக்கம்
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தனது இரண்டு கால்களையும், பெற்றோரையும் இழந்த நான்கு வயது சிறுவனின் பெற்றோரை தேடிய அழுகுரல் உலகையே தற்போது உலுக்கியுள்ளது.
காசாவின் வடகிழக்கு மூலையில் உள்ள பெய்ட் ஹனௌன் (Beit Hanoun) நகரைச் சேர்ந்தவர் அஹ்மத் ஷபாத் (4 வயது) என்ற சிறுவனே இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதலில் தனது பெற்றோர் மற்றும் 17 குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளார்.
அஹ்மத் ஷபாத்தின் இரண்டு வயதுடைய சகோதரர் மட்டுமே தற்போது உயிர் பிழைத்துள்ளார், இவர்களை தற்போது அஹ்மத் ஷபாத்தின் மாமா அபு அம்ஷாதான் பாராமரித்து வருகிறார்.
பெற்றோர் இறந்துவிட்டார்கள்
இந்த சிறுவனின் துயர நிலையினை அபு அம்ஷா பின்வருமாறு விளக்கி கூறுகிறார்,
“அஹ்மத் ஷபாத்தின் பெற்றோர் இறந்துவிட்டார்கள், ஆனால், அவன் தன் பெற்றோரைக் கேட்டுக்கொண்டே இருக்கிறான்.
அவன் எழுந்து நடக்க விரும்புகிறான், ஆனால், அவனது கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன,'எனது அப்பா எங்கே? என் அம்மா எங்கே?’ என்று ஒவ்வொரு நாளும் எங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறான்.
அவனை இந்தச் சூழலிலிருந்து மீட்கக் கடுமையாக முயன்று வருகிறோம்” என்றார்.
மரண ஓலங்கள்
கால்களை இழந்திருக்கும் இந்த சிறுவனிற்கு தற்போது சத்திர சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அஹ்மதுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள், அதற்கான வசதிகள் மருத்துவமனையில் போதாமல் இருக்கும் நிலையிலும் தாம் முயற்சித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒரு மாதத்தினைக் கடந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்தப்போரில் இழப்புகளையும், மரண ஓலங்களையும் அன்றி வேறெந்த முடிவும் கிடைக்கப்பெறப்போவதில்லை என்பது நிதர்சனமான உண்மையாக தோன்றுகிறது அதற்கு அஹ்மத் ஷபாத் இன் அழுகுரலும் சாட்சியாக நிற்கிறது.