புத்தாண்டு காலத்தில் மாத்திரம் 42 விபத்துக்கள் - 44 உயிரிழப்புகள்
கடந்த ஏப்ரல் 10 முதல் 15 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 42 வீதி விபத்துகள் பதிவானதாகவும், இதன் விளைவாக 44 பேர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 19 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், அதன் விளைவாக 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரதி காவல்துறைமா அதிபர் ஜெனரல் டபிள்யூ. பி. ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.
வாகன வகைகளின் அடிப்படையில் விபத்துக்களைப் பகுப்பாய்வு செய்ததில், அதிகபட்சமாக 16 இருசக்கர வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கட்டுப்பாடு
அதைத் தொடர்ந்து 4 முச்சக்கர வண்டிகள் , 4 வான்கள், 2 கார்கள், 2 கெப் வாகனங்கள், 2 துவிச்சக்கர வண்டிகள் என்பன இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
மற்றும் மோதிவிட்டுத் தப்பிச் சென்ற ஒரு சம்பவமும் பதிவாகியுள்ளதாக, காவல்துறைமா அதிபர் கூறியுள்ளார்.
2025-ஆம் ஆண்டில், ஆண்டின் முதல் மூன்று நாட்களில் 25 விபத்துக்களும் 26 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 19 ஆகக் குறைந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விபத்துகளுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே முக்கியக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது என, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரதி காவல்துறை மா அதிபர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |