இன்று ஐ.நாவை எதிர்கொள்கிறது இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை, உக்ரைன் விவகாரம் இம்முறை அமர்வில் அதிக கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் சமீபத்திய அறிக்கையிலும் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அடுத்துவரும் நாட்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதமும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் அமர்வுகளில் பங்கேற்கின்றனர்.
இலங்கை நேரப்படி இன்று காலை 11 மணிக்கு அமர்வில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்ற உள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் நேற்று இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.
இதனிடையே, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்செலெட்டை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவாவும் உரையாற்றியிருந்தார்.
