யாழில் கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு : தாமதமாக வந்த காவல்துறையினர்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்த பெண்ணிடம் கத்தி முனையில் 5 பவுண் நகை திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (08) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் காவல்துறையினரிடம் உதவி கோரிய போதும் பல மணி நேரம் தாமதமாக காவல்துறையினர் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, ”இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை தாக்கிவிட்டு பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 பவுண் நகையை கழுத்திலிருந்து அறுத்து எடுத்தனர்.
மூன்றாவது தடவையாக இடம்பெற்ற சம்பவம்
பின்னர் குறித்த பெண்ணையும் அரை மணி நேரத்திற்கும் அதிகநேரம் மணல் மண் அள்ளி கொட்டியும், இரும்பாலும் தாக்கியுள்ளனர்.
இதில் கணவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்றபோது மருதங்கேணி காவல்துறையினர் மற்றும் அவசர இலக்கங்களான 119, 118 ஆகியவற்றிற்கு அழைப்பு மேற்கொண்டு உதவி கோரியும் காவல்துறையினர் 8 மணிநேரம் கழித்து சரியாக காலை 9:15 மணிக்கே சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டில் நேற்றுடன் மூன்றாவது தடவையாக கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
3 கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டமை சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - காண்டீபன், கஜிந்தன், லின்ரன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |