முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாய் : ஜனாதிபதி அறிவிப்பு
'டித்வா' புயலினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முன்பிருந்ததை விடச் சிறந்த வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க 50 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானித்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இன்று (09) காலை கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கும், வீடு ஒன்றைக் கட்டுவதற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “தற்போதைய அறிக்கைகளின்படி சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் 17,000 - 18,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் அல்லது வசிக்க முடியாத அபாய நிலையிலும் உள்ளன.
2026 வரவுசெலவுத் திட்டம்
எனவே, ஒட்டுமொத்தமாக 20,000 முதல் 25,000 வீடுகள் வரை கட்ட வேண்டியுள்ளது. 2026 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 'எமக்கு ஒரு வீடு' திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வறிய மக்களுக்காக 10,000 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக மேலும் 10,000 வீடுகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
யுத்தம் 2009 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்த போதிலும், இன்னும் பலர் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக 2,500 வீடுகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், தோட்டப்புற மக்களுக்காக இந்திய உதவியுடன் வீடுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலிலேயே மேலதிகமாக இந்த 25,000 வீடுகளைக் கட்டும் பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த வீடுகள்
முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முன்பிருந்ததை விடச் சிறந்த வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க 50 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானித்துள்ளோம். அதற்கு 20, 15, 15 இலட்சம் வீதம் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.
நிதியில் ஒருபோதும் தாமதம் ஏற்படாது, 2-3 மாதங்களுக்குள் விரைவாக வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும். அதேநேரம் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

எமது தற்போதைய வாழ்க்கை தரத்திலேயே இருக்கக் கூடாது. தற்போதைய நிலையில் இருந்து மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு செல்ல முற்பட வேண்டும். இன்று 26 பேருக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
ஒரு மனிதனுக்குத் தேவையான பல அடிப்படை உரிமைகள் உள்ளன. சிறந்த வருமான வழி, பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்வு, நல்லதொரு இல்லம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும்“என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 9 மணி நேரம் முன்