நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்ப்பாண காவல்துறை பிராந்தியத்தில் 13 பேரும், காங்கேசன்துறை காவல்துறை பிராந்தியத்தில் 2 பேரும், மன்னார் காவல்துறை பிராந்தியத்தில் 6 பேரும் , வவுனியா காவல்துறை பிராந்தியத்தில் 5 பேரும், முல்லைத்தீவு காவல்துறை பிராந்தியத்தில் 8 பேரும் மற்றும் கிளிநொச்சி காவல்துறை பிராந்தியத்தில் 16 பேருமாக வடக்கில் 50 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
800 பேர் உயிரிழப்பு
இதேவேளை நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாகவும் வழக்கமாக நாளாந்தம் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் அதிகரிப்பு
எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 - 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். பண்டிகைக் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அறிமுகமில்லாத இடங்களில் குளிக்கும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |