500 கோடி செலவில் கட்டப்படும் ஹொக்கி மைதானம்..!
ஆடவருக்கான உலகக் கோப்பை ஹொக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் வரும் ஜனவரி 13-ம் திகதி முதல் 29-ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.
‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 13-ம் திகதி ஸ்பெயினுடன் மோதுகிறது.
உலகக் கோப்பை ஹாக்கி
உலகக் கோப்பை ஹொக்கி தொடருக்காக பிரம்மாண்ட ஹொக்கி மைதானம் ரூர்கேலாவில் தயாராகி வருகிறது. இந்த மைதானம் அமைக்கும் பணியை கடந்த 2021-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக் தொடங்கி வைத்தார்.
பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 24 மணி நேரமும் இரவு பகலாக வேலை செய்து தற்போது மைதானத்தின் இறுதிக்கட்ட பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.
புதிய மைதானத்துக்கு சுதந்திரப்போராட்ட வீரரும் பழங்குடியினரின் அடையாளமாக திகழ்ந்தவருமான பிர்சா முண்டாவின் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
16 ஏக்கர்பரப்பளவில்
சுமார் 16 ஏக்கர்பரப்பளவில் 21 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் ஹொக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை ஹொக்கி தொடரில் 20 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடத்தப்பட உள்ளன.அதேவேளையில் 15 ஆயிரம் இருக்கைகள் கொண்ட கலிங்கா மைதானத்தில் 24 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
பிர்சா முண்டா மைதானத்தின் பணிகள் ஏற்கெனவே முடிவடைந்து இந்தியா - தென் கொரியா ஜூனியர் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
செலவழிக்கப்பட்ட தொகை
தற்போது அலுமினிய முகப்புகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 15 மாதங்களில் இந்தமைதானத்தை கட்டி முடித்துள்ளனர். மைதான கட்டமைப்புகளுக்காக சுமார் 7,600 டொன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரூர்கேலாவில் மைதானம் கட்டுவதற்கு செலவழிக்கப்பட்ட தொகைகுறித்து ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதாதளம் அரசு அதிகாரப்பூர்வமான புள்ளி விவரம் எதையும் தெரிவிக்கவில்லை.
எனினும் விளையாட்டுத் துறை அமைச்சர் துஷார்காந்தி பெஹரா கடந்த நவம்பர் 24-ம்திகதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிர்சா முண்டா ஹாக்கி மைதானம் கட்டுவதற்கும், கலிங்கா மைதானத்தை மேம்படுத்துவதற்கும் மொத்தம் ரூ.875 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ரூ.500 கோடி
இதற்கிடையே பிர்சா முண்டா ஹொக்கி மைதானம் கட்ட ரூ.500 கோடிக்கு(இந்திய ரூபா) மேல் செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போட்டியில் கலந்து கொள்ள வருகை தரும் வெளிநாட்டு அணிகள் தங்குவதற்கு வசதியாக மைதானத்தின் அருகிலேயே 250 அறைகள் கொண்ட 5 நட்சத்திர விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்தஅறைகளை உலகக் கோப்பைதொடரின் போது நிர்வகிக்கும் பொறுப்பு தாஜ் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
