சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - பகிரங்கமாக கூறிய சிறிலங்கா
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கோரும் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் தீர்வுகளையும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் எதிர்க்கும் என கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அலி சப்ரி கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று இன்று ஜெனீவா பயணமாகின்றது.
51 வது கூட்டத்தொடர்
இந்தக் குழுவில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உட்பட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றவுள்ள அலி சப்ரி, இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜெனீவா அமர்வு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்துரைத்ததாவது,
"சிறிலங்கா அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் சபாநாயகர் தலைமையில் இது குறித்ததான தீர்மானம் எடுக்கப்படும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்துதல்
அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் அளவுகோல்களின் படி, அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் மீண்டும் நடைமுறைக்கு வரும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்துவதோடு சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் நடைமுறைப்படுத்தக் கூடிய விதத்தில் தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை சமநிலைப்படுத்த முற்றிலும் புதியதொரு சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இலங்கையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நீண்ட காலம் நீடிக்க கூடிய முழுமையான தீர்வுகளை நாம் எதிர்பார்க்கிறோம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் இருக்கும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கான உண்மையை தெரிந்து கொள்ள அனைவரும் ஒன்றினைந்து ஒரு பொறிமுறையின் கீழ் செயற்பட வேண்டும்" என்றார்.