சிறிலங்காவை விடப்போவதில்லை - ஐ.நா அமர்வில் ஆணையாளர் கருத்து
சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானங்களை நிராகரித்த போதிலும், இந்த விடயத்தில் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் தனது பணிகளை ஆற்றுமென இன்று ஆரம்பித்த ஐ.நா மனிதஉரிமை பேரவையின் 53 ஆம் அமர்வின் ஆரம்ப உரையில் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் உறுதியளித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் 21 ஆந் திகதி பிற்பகலில் இலங்கை தொடர்பான ஒரு வாய்மொழி அறிக்கையிடலை செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக இன்றைய கருத்து வந்துள்ளது.
இலங்கை விவகாரம்
இன்றைய தனது ஆரம்ப உரையில் இலங்கை விடயத்தையும் தொட்ட ஆணையாளர், மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் தீர்மானங்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தமை கவலைக்குரியது என விமர்சித்திருந்தார்.
எனினும் சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை நிராகரித்திருந்தாலும் இந்த விடயத்தில் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் தனது பணிகளை ஆற்றும் எனவும் அவர் உறுதி கூறியிருந்தார்.
இவ்வாறான பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்காக கடந்த பத்து வருடங்களில் இலங்கைக்கு சென்ற மனித உரிமை பேரவையின் பல அதிகாரிகள் அங்கு மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீதான அழுத்தம்
இவ்வாறு முன்வைக்கபட்ட பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரிய ஆணையாளர், இந்த விடயத்தில் சிறிலங்காவை தான் முன்னகர்ந்து செல்வதற்குரிய ஊக்குவிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை இடம்பெறும் அமர்வில் இலங்கை மீதான அழுத்தம் ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும் ஏற்கனவே ஜெனிவாவில் இருக்கும் இலங்கை குறித்த நிகழ்ச்சி நிரல்கள் சிறிலங்காவுக்கு சவாலானவை என்பதை ஆணையாளரின் இன்றைய ஆரம்ப உரையும் தெளிவுபடுத்தியுள்ளதாகவே தெரிகிறது.
