குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 54 இலங்கையர்கள் மீட்பு
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 54 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண்களாக சென்றவர்களே நாடு திரும்பிய நிலையில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு திரும்பி வர முடியாமல் நுழைவு விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களே இன்று காலை குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டினால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் 53 வீட்டுப் பணிப்பெண்களும் ஒரு வீட்டுப் பணியாளரும்(ஆண்) அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.
இலங்கை திரும்ப வேண்டியமைக்கான காரணம்

இவர்கள் தமது பணியிடங்களை விட்டு வெளியேறி அதிக ஊதியத்திற்கு வேலை தேடிய நிலையில் நோய் மற்றும் நுழைவு விசா காலாவதியானமை போன்ற காரணங்களினால் மீண்டும் இலங்கை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்தே குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டினால் அவர்கள் தற்காலிக கடவுச் சீட்டின் உதவியுடன் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் பொலனறுவை, மொனராகலை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு வருகை தந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு தமது ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.