6 இலட்சம் மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பான நிரந்தர வீடுகள் இல்லை: அமைச்சர் தெரிவிப்பு
நாட்டில் 61 இலட்சம் குடும்பங்கள் வசித்து வருகின்ற போதிலும் 60 இலட்சம் வீடமைப்பு அலகுகளே இருப்பதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2024 டிசம்பர் மாதத் தரவுகளின்படி, நாட்டில் 61 இலட்சம் குடும்பங்ளுக்கு வெறும் 60 இலட்சம் வீடமைப்பு அலகுகளே உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் நிவாரண உதவி
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'சில குடும்பங்களுக்கு தலா இரண்டு வீடுகள் இருந்தபோதிலும், அவற்றில் சில வீடுகள் வாழ்வதற்கு உகந்த நிலையில் இல்லை.

இந்த வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசாங்கத்தினால் 31,000 வீடுகளைக் கொண்ட விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டத்தின் கீழ் 19,000 வீடுகள் புதிதாகக் கட்டப்படும் அல்லது தற்போதுள்ள வீடுகள் புனரமைக்கப்படும் என தெரிவித்தார்.
அந்த 19,000 வீடுகளில் சுமார் 12,000 வீடுகள் அரசாங்கத்தின் முழுமையான உதவியுடன் புதிதாகக் கட்டப்படவுள்ளதுடன், எஞ்சிய பகுதி கடன் நிவாரண உதவியின் கீழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதில் தற்போது 20,000 வீடுகளின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அவற்றில் சில நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டவை, அவற்றின் பணிகளை நாங்கள் நிறைவு செய்துள்ளோம்.
மேலும் சிலவற்றின் பணிகள் அடுத்த ஆண்டுளவில் நிறைவடையும். இந்த ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இது தவிர, அரசாங்க அதிகாரிகளுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் வீடமைப்புக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் நிவாரணம் வழங்கியுள்ளோம்.
அதை இதில் சேர்க்கவில்லை. அதேபோல், வெளிநாடுகளில் பணிபுரியும் சமூகத்தினருக்கு நிவாரண வீடமைப்புக் கடன்களை வழங்குவதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்திட்டங்களையும் சேர்க்காமல் தான் இந்த 31,000 வீடுகள் வருகின்றன.
தற்போது பெருமளவிலான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒக்டோபர் 5 ஆம் திகதி 5,000 க்கும் மேற்பட்ட வீடுகளைத் திறப்பதற்கு எதிர்பார்க்கிறோம் என' அமைச்சர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |