யானை தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி உயிரிழப்பு : தமிழர் பகுதியில் துயரம்
மட்டக்களப்பு (Batticaloa) - வவுணதீவு வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01.05.2025) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
காவல்துறை பரிசோதனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.
சம்பவதினத்தன்று இரவு சென்றவர் காலையாகியும் (02.05.2025) வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் கிடப்பதை கண்டு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்படைத்துள்ளனர்.
மின்சார வேலி
இதேவேளை, திருகோணமலை (Trincomalee) - ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவில் உள்ள சூரநகர் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் நேற்று (01.05.2025) மாலை உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சூரநகர் பகுதியைச் சேர்ந்த மஹேஸ்வரன் ரவிச்சந்திரன் (வயது 47) ,துரைநாயகம் சசிகரன் (வயது 29) என தெரியவருகிறது.
வயலுக்கு போடப்பட்ட யானை பாதுகாப்பு மின்சார வேலியை சரி செய்து கொண்டிருந்தபோது சசிகரனுக்கு மின்சார தாக்கியுள்ளது.
மேலதிக விசாரணை
இதன் பின்னர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்தவரை ரவிச்சந்திரன் காப்பாற்ற முற்பட்டபோதே அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இருவரும் மாமன் மருமகன் முறையுடையவர்கள் என தெரியவருகிறது.
குறித்த சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் நேற்றிரவு பார்வையிட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
