தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு - எதிரணி எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதால், அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 08 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படக்கூடும் என கண்டி மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க(Mayantha Dissanayake) தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில் உள்ள விழா மண்டபத்தில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி வாக்காளர் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மயந்த திஸாநாயக்க,
தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையினால் நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் இரண்டாண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், எமது நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் அதனைச் செய்ய முடியாது எனவும் அவ்வாறாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கான அதிகாரத்தை நாட்டு மக்கள் ஒருபோதும் வழங்க மாட்டார்கள் எனவும் திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
