தாதியரின் அசண்டையீனமே பேத்தியின் நிலைக்கு காரணம் -தாத்தா குற்றச்சாட்டு
எனது பேத்தியின் இந்த நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தார் சிறுமியின் தாத்தா.
08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்ட நிலையில் சிறுமி தொடர்ந்தும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பில் சிறுமியின் தாத்தா சுப்பையா கனகநாயகம் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. சரவணபவன் வைத்தியர் மூலம் மருந்துகளை பெற்றுக் கொண்டோம். மருந்துகளை எடுத்தும் தொடர்ந்தும் காய்ச்சல் இருந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விடுதியில் வைத்திருந்தோம்.
வைத்தியர்கள், தாதியர்களின் அசண்டையீனமே மகளின் கை அகற்றப்பட காரணம்: பணிப்பாளர் சத்தியமூர்த்திக்கு தந்தை விரிவான கடிதம்
அங்கு இருக்கின்ற தாதியர்கள் எனது பேத்திக்கு கையில் ஊசி மருந்து செலுத்துவதற்கான ஊசியை ஏற்றி இருந்த போது எந்த தப்பும் நடந்ததாக அப்போது எங்களுக்கு தெரியவில்லை, பின்னர் மருந்துகளை ஏற்றிக் கொண்ட போது கை வீங்கி இருந்தது இது தொடர்பில் அங்கிருந்த தாதிக்கு தெரியப்படுத்திய போதும் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை.
தொடர்ந்து அந்த இரவு 11 மணி அளவில் மருந்து ஏற்றும் போது மருந்து மற்றும் இரத்தம் வெளியில் வருகிறது என்று சொன்ன அப்போதும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.
அதற்கு அடுத்த நாள் வைத்தியரிடம் சொல்லிய போது தான் வைத்தியர் பார்வையிட்ட போது கை முழுமையாக செயலிழந்து விட்டதாகவும், அதற்குரிய மருந்துகளை செய்து அந்த கையை பழைய படி கொண்டு வருவோம் என்று சொல்லிய போதும் கடந்த இரண்டு நாளைக்கு முதல் கை கழட்டப்பட்டு அதற்குரிய மருந்துகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
தற்போதும் அவசர சிகிச்சை பிரிவிலேயே எனது பேத்தி உள்ளார் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை, இதற்கு முழுமையான காரணம் அந்த விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே, நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது, நாங்கள் தற்போது படுகின்ற வேதனை இன்னும் ஒருவர் படக்கூடாது என்பதனை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.