ஏழு வருடங்களாக கிடைக்காத அனுமதி - அமைச்சர் எடுத்த உடனடி நடவடிக்கை(படங்கள்)
அரச நிறுவனமான லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 7 வருடங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 80 பேருந்துகளை இறக்குமதி செய்த போதிலும், அவற்றை கொள்வனவு செய்வதற்கான அனுமதி கிடைக்காத காரணத்தினால் 7 வருடங்களாக இயக்கப்படாமல், இருந்த நிலையில் கூடிய விரைவில் அவற்றை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொள்வனவு செய்வதற்கான தொழில்நுட்பக் குழுவின் அனுமதி கிடைக்காமையால், குறித்த நிறுவனத்தின் பனாகொட தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த பேருந்துகளை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஹோமாகம பனாகொடவில் அமைந்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையை இன்று பார்வையிட்டதன் பின்னர் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், இலங்கை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
படங்கள் -லங்காதீப

