தரக்குறைவான மருந்துகளை பயன்படுத்தல் என்பதை நிராகரிக்கிறேன்! - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல
சிறிலங்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்துகளில் 80% ஆனவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது மாத்திரமல்லாமல் இப்போது இந்தியக் கடனுதவியின் கீழ் கொண்டுவரப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மையில் கடந்த 19ஆம் திகதி அன்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தலைமையில் நாடாளுமன்றில் நிகழ்ந்த சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டது.
பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த கெஹெலிய, குறித்த சம்பவம் நிகழ்ந்த விடுதியில் இருந்த 12 நோயாளர்களுக்கு அந்த மருந்து வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
2013 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது
அது மாத்திரமின்றி இந்த ஆண்டில் 167,000 பேர் இந்த மருந்தைப் பயன்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மருந்துகள் 230,000 வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்து 2013 ஒக்டோபர் 21ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், "தரக்குறைவான மருந்துகள் எது என்பதற்கு வரைவிலக்கணம் இல்லாததால், தரக்குறைவான மருந்து என்று பயன்படுத்துவதை தான் நிராகரிப்பதாகவும்" அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது தெரிவித்தார்.
பிபிலேவின் கொள்கை
இதன் போது பேராசிரியர் சேனக பிபிலேவின் கொள்கை தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இதன்போது கேள்வி எழுப்பிய வேளை, தற்பொழுதும் அந்தக் கொள்கை பின்பற்றப்பட்டு வருவதாக அமைச்சர் ரம்புக்வெல்ல பதிலளித்தார்.
இந்தக் கொள்கை பின்பற்றப்படுமாயின், அதன் ஊடாக முழுமையாக ஒரு வருடத்துக்குத் தேவையான மருந்துகளை, அவற்றின் பெயர்களுடன் ஒரே தடவையில் விலைமனுக் கோரி பெற்றுக்கொள்ள முடியும் என இந்த வேளையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டினார்.
உபகரணங்களின் பற்றாக்குறை
அவை தவிரவும், மாவட்ட மட்டத்தில் வைத்தியசாலைகளில் காணப்படும் சிக்கல்கள், அதிகாரிகளின் வெற்றிடங்கள், மருந்து மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி, டயனா கமகே, சிறிபால கம்லத், நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத், திஸகுட்டி ஆரச்சி, சஹன் பிரதீப் விதான, வைத்திய கலாநிதி கயாஷான் நவனந்த, எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் சம்பத் அத்துகோரல ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.