இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகின்றன.
இதன்படி இந்த வருடத்தின் முதல் மாதத்தில் (ஜனவரி) 82,327 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 மற்றும் 31 க்கு இடையில், 2000 முதல் 3000 சுற்றுலாப் பயணிகள் தினசரி நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஜனவரி 5 ஆம் திகதி வந்திருந்தனர். அன்று வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3,371.
ஜனவரியில் ரஷ்யாவிலிருந்து நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13,478 ஆகவும், இந்தியாவில் இருந்து 11,751 ஆகவும் இருந்தது. உக்ரைனில் இருந்து 7,774 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7,442 பேரும் வந்துள்ளனர்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் அறிக்கைகளின்படி, அந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கைக்கு வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 2020ஆம் ஆண்டில் 89,357 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 2021ஆம் ஆண்டில் 5668 இந்திய சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டில், ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து 49,397 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில், ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து 16,894 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டிற்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, உக்ரைன், பிரான்ஸ், அமெரிக்கா, கஜகஸ்தான், கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளன.
