இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையின் மோசடி அம்பலம் : தீவிர விசாரணையில் காவல்துறை
பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை தொடர்பில் அலவத்துகொட பிரதேசத்தில் இருந்து செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் காப்புறுதி இழப்பீடு பெறுவதற்காக தான் தங்கியிருந்த ஹோட்டல் கதவு உடைக்கப்பட்டு தனது ஆவணங்கள் திருட்டு போயுள்ளதாக காவல்துறையிடம் பொய்யான முறைப்பாடு அளித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹோட்டல் கதவு உடைக்கப்பட்டு
பிரித்தானிய பிரஜை ஒருவர் அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.இவ்வாறு அவர் தங்கியிருந்த ஹோட்டல் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி 90,000 ரூபா பணம், 2 கைக்கடிகாரங்கள், கமரா ஆகியவையே திருடப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த போது, சந்தேகத்திற்குரிய பிரித்தானிய பிரஜை விசாரணைகள் வேண்டாம் எனவும் காப்புறுதி இழப்பீடு பெறுவதற்கு ஆவணம் ஒன்றே போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த காவல்துறையினர்
பிரித்தானிய பிரஜையின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளின் போது, அறையின் கதவுகள் உள்ளே இருந்து உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி, தற்போது சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர் காவல்துறையினரை தவிர்த்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |