குருந்தூர்மலையில் அரங்கேறிய நாடகம்
குருந்தூர்மலையில் நேற்று ஒரு நாடகம் மிகவும் திட்டமிட்ட வகையில் கனகச்சிதமாக அரங்கேறியுள்ளது.
தமிழர்களின் தொன்மை மிகுந்த காணியை அடாத்தாக பிடித்து அதில் தொல்பொருட்கள் உண்டென கூறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தமிழர்கள் நீதிமன்ற படியேறி நீதிகேட்டு போராடி வருகின்றார்கள்.
ஆனால் தமிழரின் வாழ்வில் பேரினவாதத்துடன் இணைந்து விளையாடும் வகையில் சில கோடரிக்காம்புகளின் செயற்பாடுகள் தம்மை கவலையடைய செய்வதாக தெரிவிக்கின்றனர் தமிழ் மக்கள்.
கம்மன்பிலவை வரவேற்ற தங்கராசா
அப்படியான நிகழ்வு ஒன்றுதான் நேற்று நடைபெற்றிருக்கிறது.
அதாவது, முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு நேற்றையதினம் வருகைதந்திருந்த கடும்போக்கு அரசியல் வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான காதர் மஸ்தானின் குமுழமுனைக் கிராம இணைப்பாளர் சேரன் என்று அழைக்கப்படும் தங்கராசா என்பவர் வரவேற்றார்.
இவருக்கு அந்தப் பகுதியில் காணி இல்லை. இவரின் மனைவியின் சகோதரன் சௌந்தரராசா சசிகுமார் என்பவருக்கே சிறிதளவு ஏக்கர் காணியுண்டு.
பேரினவாதத்தினால் களமிறக்கப்பட்ட தங்கராசா
சேரன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டதோடு மஸ்தானை வெல்ல வைப்பதற்காக பேரினவாதத்தினால் களமிறக்கப்பட்டவராவார்.
நேற்றையதினம் குருந்தூர் மலையில் உதய கம்மன்பிலவை வரவேற்று பாதிக்கப்பட்ட மக்களில் தானும் ஒருவர் போல் மிகவும் நன்றாக நாடகமாடியுள்ளார்.
உதய கம்மன்பிலவின் வரவினை எதிர்த்து குருந்தூர்மலையில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு தலம் அமைந்த குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி விகாரை கட்டப்பட்டு தற்போது முடியும் தறுவாயில் உள்ளது.
மக்களின் போராட்டத்தை நசுக்கும் கைக்கூலிகள்
இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவரும் இவ்வேளையில் திட்டமிட்டு ஒருசிலர் அரசின் கைக்கூலியாக இருந்து நியாயத்திற்கு போராடும் மக்களின் போராட்டத்தினை நசுக்குகின்றார்கள்.
மக்கள் தெளிவாக உணர வேண்டும்
இதில் காதர் மஸ்தானின் இணைப்பாளரில் ஒருவரான சேரனும் தற்போது இறங்கியுள்ளார்.
இது திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடு என்பதை மக்கள் தெளிவாக உணர வேண்டும் என கவலையுடன் தெரிவிக்கின்றனர் நீதிக்காக போராடும் தமிழ் மக்கள்.
