நிராகரிக்கப்பட்டது கோரிக்கை -நான்கு மணிநேர மின்வெட்டு?
தற்போதைய சூழ்நிலையில் மின்வெட்டை நடைமுறைப்படுத்தவேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை இலங்கை மின்சார சபை நிராகரித்துள்ளது.
நான்கு பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் நான்கு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என சபை அறிவித்துள்ளது.
எனினும், தற்காலிக தீர்வாக மின்வெட்டு தேவையில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க(Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
அதிகரித்த தேவை காரணமாக சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மின் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மின்சாரத் தேவையைக் குறைக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தேசிய மின்வட்டத்திற்கு 270 மெகாவாட் மின் இழப்பு ஏற்பட்டதால், பகல் மற்றும் இரவு நேரங்களில் தலா இரண்டு மணி நேரம் நான்கு பிரிவுகளுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சாரசபை முன்மொழிந்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 07 ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தக்காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாமென சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தான் கோரிக்கை முன்வைத்துள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
