சித்தியின் துன்புறுத்தலை தாங்கமுடியாது காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி
தனது சித்தியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் 11 வயது சிறுமி தனியாக காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து முறைப்பாடு அளித்ததாக ஹொரவ்பொத்தானை காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுமியின் தாய் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், பின்னர் அவரது தந்தை ஒரு மகள் உள்ள விதவையை திருமணம் செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அழுது கொண்டே வந்த சிறுமி
காவல் நிலையம் வந்த சிறுமி, தனது சித்தி தனது மகளை மிகவும் அன்பாக நடத்துவதாகவும்,தன்னை கடுமையாக துன்புறுத்துவதாக கூறியதாகவும், சித்தியின் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி அழுது கொண்டே வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் வீட்டிலிருந்து காவல் நிலையம் சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளதாகவும், அந்த தூரத்தை அவர் நடந்தே வந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சித்தி கைது
இதன்படி, சிறுமியின் சித்தியான நாற்பத்தொரு வயதுடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நாளை (05) முன்னெடுக்கப்படவுள்ளன.
காவல்துறை தலைமை அதிகாரி நவீன் இந்திரஜித் தயானந்தாவின் மேற்பார்வையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரி ரஞ்சனி மற்றும் பிற அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
