யாழில் தவற விடப்பட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை தாக்கிய கும்பல் - ஐந்து பேர் கைது
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் காவல்துறையினரால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஜவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
சில தினங்களுக்கு பின்னர் நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நிலையில், வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் குழு குறித்த நபரை கட்டிவைத்து தாக்கி காணொளியை வெளியிட்டிருந்தது.
இதன்படி, சம்பவம் தொடர்பாக கைதானவர்களிடம் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவ கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழுவொன்று அவரை கட்டிவைத்து தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அத்தோடு, தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், “உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில் நிலத்தில் தங்க நகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன்.
அதனை குறித்த வெதுப்பகத்தில் ஒப்படைத்ததுடன் அது தங்க ஆபரணமா என ஆராய்ந்து உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என கடந்த 24ஆம் திகதி வழங்கினேன்.
தாக்குதல்
இரண்டு நாட்கள் கடந்த நிலையில் குறித்த வீதியில் செல்லும்போது குறித்த வெதுப்பகத்திற்கு சென்று நான் வழங்கிய ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்தீர்களான கேட்டேன்.
அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறினர். மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து குறித்தத வெதுப்பகத்துக்கு சென்ற நிலையில் அந்தப் பொருளை உரியவர்களிடம் ஒப்படைத்தீர்களா என கேட்ட நிலையில் ஒப்படைக்கவில்லை என பதில் வழங்கினர்.
இந்நிலையில், குறித்த பொருளைத் தாருங்கள் ஏதாவது சிறுவர் இல்லத்திற்கு அதை வழங்கி வைப்போம் என கேட்டேன்.
அதனை தொடர்ந்து, வெதுப்பகத்தில் நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து தாக்கினர். நான் சொல்வதை கேளுங்கள் ஏன் தாக்குகிறீர்கள் என கத்தினேன் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் என்னை தாக்கியதுடன் கம்பத்தில் கட்டிவைத்து தாறுமாறாக தாக்கினர்.
காவல்துறை மீது குற்றச்சாட்டு
வீதியால் சென்ற சிலர் என்னை தாக்குவதை அவதானித்த நிலையில் எனது நியாயத்தை கேட்டு என்னை மீட்டனர்.
முகத்திலும் உடலிலும் அடி காயங்களுக்கு உள்ளாகிய நான் கோப்பாய் காவல்துறையினருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவித்து விட்டு வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் சென்றுவிட்டேன்.
வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பியபின் கோப்பாய் காவல்நிலையம் சென்றேன் என்னை தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை.
காவல் நிலையம் வந்த சட்டத்தரணி ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் என்றார். எனக்கு நியாயம் வேண்டும் என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உயிர் மாய்ப்பேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |