உயர்தர பெறுபேறுகள் தொடர்பில் சந்தேகம் வேண்டாம் -பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு
எவ்வித சந்தேகமும் வேண்டாம்
வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் எனவும் பரீட்சை திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகள் 100 வீதம் சரியானவை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.ஜி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த காலியில் உள்ள பாடசாலையொன்றின் உயர்தர மாணவன் சில சட்டவிரோத செயலில் ஈடுபட முற்பட்டுள்ளதாகவும் சட்ட திணைக்களத்தினால் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
எவ்வித வித்தியாசமும் இல்லை
எனவே, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்னமும் சரியாக வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்திடம் விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் பெறுபேறுகள் பத்திரமாக இருப்பதாகவும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கு இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.