தமிழர் பகுதியில் காணாமற்போன சிறுவன் - காவல் நிலைய படியேறிய தந்தை
தனது மகனை காணவில்லை எனத் தெரிவித்து தந்தையொருவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அம்பாறை - சவளக்கடை காவல்துறை பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய தீபன் சயான் என்ற தனது மகனே காணாமல் போயுள்ளதாக சிறுவனின் தந்தை, இன்று திங்கட்கிழமை (26) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரண வீட்டிற்கு சிறுவனை அழைத்துச் சென்ற தந்தை
நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) வீரமுனை பகுதியில் மரண வீடு ஒன்றுக்கு தந்தையார் சிறுவனை அழைத்துச் சென்ற நிலையில், சிறுவன் காணாமல் போயுள்ளார். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் தந்தையார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்,தந்தை விவாகரத்து
இதேவேளை வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனின் தாயாரும் சொறிக்கல்முனையைச் சேர்ந்த தந்தையாரும் விவாகரத்து செய்துள்ள நிலையில்,சிறுவனான தீபன் சயான் தந்தையாருடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
