பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி -மின்வெட்டுக்கு அனுமதி இல்லை
பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 3,31,000 இற்கும் அதிகமான மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதம்
இந்தக்காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால், அது அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின் உற்பத்திக்காக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் இருந்து மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் தினமும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்
அத்துடன் உயர்தரப் பரீட்சையின் போது ஏற்படும் மின்வெட்டுகளை தடுக்க உரிய தரப்பினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று மனுக்களை தாக்கல் செய்துள்ளன.