இலங்கை வரும் ஐஎம்எப் பிரதிநிதிகள் குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு (Sri Lanka) விஜயம் செய்யவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்தக் குழு இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்றே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
பொருளாதார கொள்கைகள்
இதன்படி அடுத்த வாரம் இலங்கைக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இந்த மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்கவுள்ளதுடன், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் இந்த நாட்டில் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழ் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட உள்ளது.
மூன்றாவது மீளாய்வு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அண்மையில் வொஷிங்டனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படத் தயாராக இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் விரிவான கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை நடாத்துவார்கள், அதன் பின்னர், இலங்கைக்கான நான்காவது தவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |